தி டும்பிரவேசமாய்த் தன் எதிரில் வந்து நின்ற அந்த வாலிபனை ஒருகணம் ஏறெடுத்துப் பார்த்த மோகனா அடுத்த விநாடி வெட்கத்தால் கண்களைத் தரையில் சாய்த்துக்கொண்டு, சற்று விலகியிருந்த தாவணியையும் இழுத்துப் போர்த்திக்கொண்டு இரண்டடி பக்கவாட்டில் எடுத்து வைத்துக் கோலம் போட்ட இடத்தை விட்டுக் கொஞ்சம் தள்ளி நின்றாள். மீண்டும் அவள் புறக் கண்களுக்கு அவன் முகத்தை நோக்கும் துணிவில்லையே தவிர, அகக் கண்கள் அந்த வாலிபனின் தோற்றத்தை எடை போட்டுக்கொண்டிருந்தன. விநாடி நேரம் கண்கள் பார்த்த மாத்திரத்திலேயே அந்த வாலிபனுடைய தோற்றம் முழுவதையும் தீர்மானிக்கக்கூடிய அத்தனை திறன் தனக்கு எப்படி வந்தது என்று மோகனா தனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டுக் கொண்டாள். அவள் எதிரே நின்ற அந்த வாலிபனுக்கு வயது இருபத்து ஐந்துக்கு மேலிராது. உயரமான, ஒல்லியான, கம்பீரமான சரீரத்தைப் படைத்த அவன் மாநிறந்தான். இருந்தாலும் முகத்திலிருந்த களை, நிறக் குறைவைப் பெரிதும் ஈடுபடுத்தியிருந்தது. விசாலமான அவன் கண்கள் பார்ப்பதற்கு மிக அழகாயிருந்தாலும் அவற்றில் ஏதோ ஒரு சோகம் மட்டும் தொக்கி நின்றது. அவன் கிராப்பை வெட்டிச் சிறிது நாட்கள் ஆகியிருந்தபடியால் மயிர் சற்று அதிகமாக வளர்ந்திருந்தது. அப்படியிருந்தும் அவன் முகம் சில சினிமா நாடகக்காரர்களைப் போல் மட்டமாயிராமல் பார்ப்பதற்குக் கண்யமாகவே இருந்தது. பெரிய குடியில் பிறந்தவன் என்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. அவன் அணிந்திருந்த உடைகள் பெரிய குடியில் பிறந்தவனானாலும் அந்தச் சமயத்தில் அவன் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்திருந்தான் என்பதை நிரூபித்தன. அவன் மேலே போட்டுக்கொண்டிருந்த ஷர்ட் நன்றாகத் தைக்கப்பட்டிருந்தாலும் தோள் பட்டையில் சற்றுக் கிழிந்து சிறிது ஒட்டும் போடப்பட்டிருந்தது. கால் நிஜார் நல்ல ரெட்டுப் போன்ற முரட்டுத் துணியில் தைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த மோகனா துணியின் விலையும் கஜம் முக்கால் ரூபாய்க்கு மேலிருக்க முடியாது என்பதைத் தீர்மானித்துக் கொண்டாள். அவன் பூட்சும் நல்ல சர்வீஸைக் கண்டு ரிடையராகும் ஸ்திதியில் இருந்தது. அந்தப் பழைய பூட்ஸைச் செண்பகத் தோட்டத்துச் சேறும் நன்றாகப் பதம் பார்த்திருந்தபடியால் ஓரங்களிலெல்லாம் சேறு ஒட்டி, பூட்ஸ் பார்ப்பதற்கு மகா கோரமாயிருந்தது. அந்தச் சேறு நிஜாரையும் கவனித்துவிடப் போகிறதே என்ற அச்சத்தால் அந்த வாலிபன் நிஜாரின் அடிப்பாகத்தை இரண்டு மூன்று தடவை மடித்து மேலுக்காக உயர்த்தியிருந்தான். அந்த மடிப்புக்கும் பூட்ஸுக்கும் இடையிலே தெரிந்த அவன் கால்கள் ஒல்லியாயிருந்தாலும் மிக உறுதியாகப் பலமாக இருப்பதை மோகனா கவனித்தாள். இதையெல்லாம் மனத்திற்குள் ஆராய்ந்து எடை போட்ட மோகனா, 'எதற்காக இத்தனை தூரம் ஒரு புருஷனை அலசுகிறோம்' என்று எண்ணிப்பார்த்ததால் ஓரளவு வெட்கமும் கொண்டவளாய்க் கையிலிருந்த கோலப்பொடி மரவையை இடது கையால் இறுக்கிப் பிடித்தும் வலது கை விரல்களால் கோலப்பொடியை நிமிண்டி அளைந்தும் நாணத்தால் இம்சைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் அப்படி நாணி ஒதுங்கி நிற்பதைப் பார்த்த வாலிபன் பெரிதும் ஆச்சரியப்பட்டான். அந்த அழகியைப் பார்த்ததும் அவளுடன் பேச்சுக் கொடுக்கலாமா கூடாதா என்று ஒரு நிமிஷம் தத்தளித்த அவன், அவளுடைய நாகரிக உடைகளைக் கண்டு அவள் முழுவதும் பட்டிக்காடு அல்லவென்று தீர்மானித்துக்கொண்டு அவளை அணுகினான். மோகனா கட்டிய மெல்லிய சிற்றாடை கோலத்தில், புரளாதிருப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த படியால் உள்ளேயிருந்த வெள்ளை உள்பாவாடை, உதடுகள் அசைந்தால் தோன்றும் வெண்பற்களென லேசாக வெளியே எட்டிப் பார்த்து நகைத்தது. தாவணி விலகித் தொங்கிய சமயத்தில் மெல்லிய ரவிக்கைக்குள் நாடாக்களைப்போல் தெரிந்த வெண் பட்டைகள் இரண்டு உள்ளே 'பாடி' இருக்கும் உண்மையையும் வெளிப்படுத்தின. தலையில் கருமயிர்களுக்கிடையில் அவள் செருகியிருந்த ஸ்லைடுகள் நாகரிகத்தின் உச்சியைக் காட்டின. இவற்றையெல்லாம் கவனித்த அந்த வாலிபன், 'அப்பா! பட்டணத்தைவிட கிராமங்களில் நவநாகரிகம் எத்தனை துரிதமாகப் பரவுகிறது!’ என்று தனக்குள் ஆச்சரியப்பட்டுக் கொண்டான். இத்தகைய நாகரிகப் பெண் தன்னைக் கண்டதும் எழுந்து நாணி அகன்று நின்றது அவன் ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது. 'நாகரிகத்துக்கும் நாணத்துக்கும் வெகு தூரமாயிற்றே?’ என்று யோசித்தான் அந்த வாலிபன். அவளது நாகரிகத்துக்குக் காரணம் மட்டும் அவன் புரிந்து கொண்டிருந்தால் அவ்வளவு ஆச்சரியத்துக்கு அவசியமே இருக்காது