வணக்கம். சோழ மன்னர்களின் ஆட்சிச் சிறப்பை உணர்த்துகின்ற வரலாற்று நாவல்களும், பல்லவ மன்னர்களின் ஆட்சிச் சிறப்பை உணர்த்துகின்ற வரலாற்று நாவல்களும் போட்டி போட்டுக்கொண்டு பத்திரிகை உலகில் பவனி வந்து கொண்டிருப்பதைக் கண்டதும், பாண்டிய மன்னர்களின் ஆட்சிச் சிறப்பையும், அவர்களின் ஆளுமைத் தன்மையையும் அனைவரும் உணர வேண்டும் என்று என்னுள் எழுந்துவிட்ட வேகத்தின் வடிகாலே இந்த ‘வைகையின் மைந்தன்’.
‘வைகையின் மைந்தன்’ என்று பாராட்டும்படியாக வாழ்ந்தவன் பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி 765 – 790). இவன் தன்னுடைய மூன்றாம் ஆட்சியாண்டில் வெளியிட்டுள்ள ‘வேள்விக்குடி சாசனம்’ சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்துள்ள அரிய பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது. இந்த சாதனத்தின் வாயிலாக கி.பி ஆறாம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியில் களப்பிரரிடமிருந்து பாண்டிய நாட்டை கைப்பற்றி மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிலைபெறச் செய்த பாண்டியன் கடுங்கோன் முதல் பல்வேறு பாண்டிய மன்னர்களின் வெற்றிகளையும், ஆட்சிச் சிறப்பையும் அறியமுடிகிறது.
“பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீள்முடி நில மன்னவன்” என்று வேள்விக்குடி சாசனத்தில் புகழப்படும் நெடுஞ்சடையன் பராந்தக பாண்டியனை மையமாக வைத்து இந்த வரலாற்று நவீனத்தைப் படைத்துள்ளேன். ஒரு மன்னனைப் பற்றி எழுதும் போது அவன் வாழ்ந்த காலகட்டத்தில் காணப்பட்ட பல்வேறு சூழ்நிலைகளையும், தெளிவாக உணர்ந்து கொண்ட பின்பு எழுதத் தொடங்கினால்தான் தெளிவான நீரோட்டம் போன்ற கதை அமையும் என்கிற உறுதியான மனப்பக்குவத்தோடு இவன் காலத்தில் நடைபெற்ற களப்பிரர் போரையும், பல்லவ மல்லன் என்று புகழப்பட்ட இரண்டாம் நந்திவர்மனுடன் காவிரியின் தென்கரையில் இவன் நடத்திய போரையும் ஆதாரமாகக் கொண்டு, பார்த்திபன், பவளவல்லி, நந்தினி, மாவலிராயன், கீர்த்தி, கார்த்தியாயினி போன்ற கற்பனைப் பாத்திரங்களைச் சுழல விட்டிருக்கிறேன்.
நெடுஞ்சடையன் பராந்தகன், இரண்டாம் நந்திவர்மன், பாண்டிய முதல் அமைச்சர் மாறன்காரி அவர் சகோதரர் மாறன் எயினன், ஏனாதி சாத்தஞ் சாத்தன், சாத்தன் கணபதி, சங்கரன் ஸ்ரீதரன், உதயசந்திரன், பிரம்மஸ்ரீ ராஜன், வைணவப் பெரியார், விஷ்ணுசித்தர், (பெரியாழ்வார்) ஆண்டாள், பெரும்பிடுகு முத்தரையன், ஆகியோர் இந்த வரலாறு நடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள்.
தன்னுடைய பிறப்பைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்வதற்காக கரவந்த புரத்திலிருந்து மதுரைக்கு வரும் பார்த்திபன் எதிர்பாராதவிதமாக அரசியல் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்வதில் தொடங்கி, களப்பிரருடன் நடைபெற்ற போரிலும், பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனுடன் காவிரியின் தென்கரையில் நடைபெற்ற போரிலும் பாண்டிய நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தந்து, இறுதியில் தன் தந்தையின் கடைசி விருப்பத்தை உணர்ந்து, ஆத்மபலம் பெற்று, ஆன்மிக நல்வாழ்வின் வழிகாட்டியாக விளங்கிட, திரும்பவும் கரவந்தபுரத்திற்கே சென்றுவிடுவது வரையில் வரலாற்று நிகழ்ச்சிகளையும் இணைத்து, என்னால் இயன்ற வரையில், சரித்திரத்திலிருந்து பிறழாமல் கதையை நடத்திச் சென்றுள்ளேன். பார்த்திபனின் மனதில் நிழல் தேடும் நெஞ்சங்களாக பவளவல்லியையும், நந்தினியையும் சித்தரித்துள்ளேன்.
இந்நாவல் 1988- ஆம் ஆண்டு கலைமகள் நடத்திய ‘அமரர் ஸ்ரீநாராயணசுவாமி ஐயர் நினைவு நாவல் போட்டி’யில் பரிசு பெற்று கலைமகளில் தொடராக வெளிவந்துள்ளது. நாவலின் திறத்தை செவ்விதின் உணர்ந்து பரிசு நல்கிய அமரன் கி. வா. ஜ அவர்களுக்கும் தற்போது ஆசிரியராக இருக்கும் எஸ். வி.ரமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்து என் முன்னேற்றத்திற்கு வழி வகுத்து கொடுத்த டாக்டர் கலைமாமணி திரு.விக்கிரமன் அவர்கள் இந்த நாவலுக்கு ஆசியுரை வழங்கி இருப்பது நான் பெற்ற பெரும்பேறு என கருதுகிறேன்.
‘அங்கங்கே தேரும் அறிவன்’ போல நல்ல நூல்களைத் தேடிச்சென்று பயன் பெற்று பாராட்டுகின்ற வாசகர்களாகிய உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.