ஊரில் நம் எல்லோர் வீட்டிலுமே கொல்லைப்புறம் இருக்கிறது. அம்மிக்கல்லு, மோட்டர்ப்பெட்டி, நாய்க்குட்டி, ஈரச்சாக்கு, கட்டித்தொங்கும் தென்னைமட்டை என்று நிறைந்திருக்கும், நாம் மட்டுமே அறிந்த நமது கொல்லைப்புறம். நம் நினைவுகளும் அப்படியே. ஐஞ்சாம் வகுப்பு ராதிகா, பங்கர், பிள்ளையார் கோயில், ஒழுங்கைக் கிரிக்கட், இளையராஜா முதற்கொண்டு பிரேமதாசா போட்ட பீக்குண்டுவரை அத்தனையும் நம் பிரத்தியேக கொல்லைப்புறத்துக் காதலிகளே.
சில காதலிகளை நினைக்கும்போது கண் கலங்கும். சில பெயர்கள் உதட்டோரத்தில் புன்னகையை வரவழைக்கும். ஊருக்குத் திரும்பும்போதும் மனம் அவர்களையே தேடிப்போகும். பேசினவற்றை மீட்டிப்பார்க்கும். பேசமறந்தவற்றைப் பேசி முடிக்கும். சிலதுக்கு செவிட்டைப்பொத்தி அறையவேணும்போலவும் தோன்றும். சிலது நமக்கு அறையும்! சிலவருடங்களுக்கு முன்னர், நான் வாழ்ந்த தின்னவேலி வீட்டுக்குச் சென்றபோது என் கொல்லைப்புறத்தை தேடி ஓடினேன். என்னைக்கண்டதும் அதற்கு என்ன ஒரு புளகாங்கிதம். ஆச்சிமார்போல கட்டிக்கொஞ்சியது. ஆட்டுக்கல்லில் போய் அமர்ந்தேன். அசரீரி கேட்டது. “என்ன மறந்திட்டியா … ஆட்டுக்கல்லில இருக்கக்கூடாது ... வீட்டுக்கு தரித்திரம்” அட! எப்படி மறந்தேன்? போய் மோட்டர்ப்பெட்டியில் அமர்ந்தேன். வாழ்வின் அத்தனை கணங்களும் மீண்டும் வந்து சேர்ந்தன. அந்தச்சிறுவன் சம்பல் இடித்துக்கொண்டிருந்தான். நேர்சரியில் கூடப்படிக்கும் ராதிகா தனக்கு மனைவியாக அமையவேண்டுமென்று அம்பாளை கும்பிட்டுக்கொண்டிருந்தான். ‘முத்துமணி மாலை’ ஹம்மிங் பண்ணினான். வெளியே மழை பெய்யும்போது, கொல்லைப்புறத்திலேயே விறகு மட்டையால் தனியே சுவரில் பந்தை அடித்து கிரிக்கட் விளையாடினான். திடீரென்று அவன் ஆட்டுக்குட்டி ஓடிவந்து முன்னிரண்டு கால்களையும் உயர்த்தி அவன் நெஞ்சில் வைத்தது. செல்லநாய் சுற்றிச் சுற்றி ஓடிவந்தது. எங்களை எல்லாம் மறந்துவிடுவாயா என்று என் பள்ளிக்கால நண்பி குட்டி கேட்டாள். திடீரென்று குட்டி அங்கே வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. திரு திருவென முழித்தேன். மறந்துதான் விடுவேனோ? உள்ளுக்குள் ஏதோ ஒரு அச்சம். அந்தக்கணங்களை பதியவேண்டுமே. அவற்றைக் கர்ப்பத்திலேயே சுமந்து கொண்டிருந்தால் காலப்போக்கில் என்னோடு சேர்ந்து என்றோ ஒருநாள் அவையும் கலைந்துவிடும். கூடாது. எமக்குப் பின்னாலும் நம் வாழ்க்கை நிலைபெறவேண்டும். நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பெருமைகளை ஒவ்வொன்றாக உலகறியப் பிரசவிக்கவேண்டும்.